‘‘பட்டையை கிளப்பி விடுவேன் ஜாக்கிரதை’’ : மேடையில் எச்சரித்த துரைமுருகன் காரணம் என்ன?
பட்டையை கிளப்பி விடுவேன் ஜாக்கிரதை என்று மேடையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று பேசியநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்:
தமிழகத்தில் கொரோனா வராத ஆட்கள் மிக குறைவு எனக் கூறினார். மேலும் தனக்கு கொரோனா வந்ததாக கூறிய துரைமுருகன் தேர்தலுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிருக்கு ஆபத்து இல்லை எனக் கூறினார் .
அதேசமயம் கொரோனா மூன்றாவது அறை வருவதாக கூறுகிறார்கள் அது எப்படி இருக்கும் என்று தெரியாது எனக் கூறினார். மேலும், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

நான் அந்த மருத்துவர்களுக்கு சொல்கிறேன் முறையாக பணி செய்யுங்கள் ,இல்லையென்றால் பட்டையை கிளப்பி விடுவேன். இடமாற்றம் செய்ய மாட்டேன் பணிநீக்கம் செய்து விடுவேன் என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், மக்களுக்கு வியாதி வராமல் தடுப்பதற்காக அரசாங்கம் வைத்தியம் செய்கிறது. ஆனால் நோய் வருபவர்களை தேடி மருத்துவர்கள் செல்வது தான் திமுக ஆட்சி,மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய தத்துவத்தை முதல்வர் உருவாக்கியிருப்பதாக கூறினார்.