மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்!
தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 484 பயனாளிகளுக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் இருப்பதாகவும், வறட்சி காலங்களில் வேளாண்மை மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மூன்று மாத காலத்திற்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது என கூறியுள்ளார்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் அவ்வப்போது வறட்சி சூழ் நிலை ஏற்படுவதால், மழைக்காலங்களில் பாலாற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும்.இப்பணி முடிந்தவுடன் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்,வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.