விமானத்தில் ஏறிய அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியின் நடப்பு வாரம் தமிழ்நாட்டின் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்று இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை விமான நிலையம் சென்ற அவரின் பாஸ்போர்ட் மற்றும் விசா சரிபார்க்கப்பட்டது. ஆனால் விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்ததால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பிய துரைமுருகனின் பாஸ்போர்ட் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு மாலை 6.40 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல 4.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.
அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு விமானத்தில் சென்று அமர்ந்த துரைமுருகனுக்கு புறப்படும் நேரத்தில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து 15 நிமிடங்கள் விமானம் புறப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்தும் நெஞ்சுவலி இருந்ததால் விமானத்தில் இருந்து கிழே இறங்கிய அமைச்சர் துரைமுருகன் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.