தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது - அமைச்சர் துரைமுருகன்!
தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண நிதி இரண்டாம் தவணையாக தலா ரூ.2000 வழங்கும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் தவணையாக 4,29,234 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் 85 கோடியே 84 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறினார்.
மேலும், தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரானா தொற்று காட்டுக்குள் வந்திருப்பதாகவும், பொதுமக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வேலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்றும், பாலாற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.