டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கின்றனர் - அமைச்சர் துரைமுருகன்!
கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் தற்போது வரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது "டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்.
நியாயம் வேண்டாமா
உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு Soft drink போல மாறிவிடுகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது.
கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகக்கூடிய அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்" என்று தெரிவித்தார்.