காவலரை அறைந்த அமைச்சரின் உதவியாளர் - திருச்செந்தூரில் திடீர் பரபரப்பு
திருச்செந்தூரில் போக்குவரத்து காவலரை அமைச்சரின் உதவியாளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் முத்துக்குமார் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் சரவணப் பொய்கைப் பகுதி நுழைவு வாயிலில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அருகிலுள்ள மணி அய்யர் ஹோட்டல் முன்பு திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், மீனவர் நலன், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவி வாகனத்தை நிறுத்திவிட்டு அமைச்சரின் உதவியாளர் கிருபா ஹோட்டலுக்குள் சென்றுள்ளார்.
இதனிடையே உதவி வாகனத்தின் டிரைவர் குமாரிடம் காரை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதபடி சற்று ஓரமாக நிறுத்தும்படிச் சொன்னதற்கு கார் டிரைவருக்கும், போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த டிரைவர் அமைச்சரின் உதவியாளர் கிருபாவிடம் சொல்ல, அவர் தலைமைக் காவலரை அழைத்து அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத முத்துக்குமார் அமைச்சரின் உதவியாளர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தான் செய்த செயலுக்கு கிருபா மன்னிப்பு கேட்டதால் தலைமைக் காவலர் முத்துக்குமார் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.