ரைசிங் பாரத் மேடையில் சுகாதாரம் முதல் நீட் வரை... அமைச்சர் அருண்ராஜ் கருத்துக்கள்
சிஎன்பிசி மற்றும் நெட்வொர்க் 18 சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ரைசிங் பாரத் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இதில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மருத்துவம், நிர்வாகம், அரசியல், சுகாதாரம், நீட் மற்றும் போதைப் பழக்க ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசியுள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் பதில்
நிகழ்ச்சியில் நியூஸ் 18 நிர்வாக ஆசிரியர் விவேக் நாராயணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், மருத்துவராக இருந்தபோது ஏழை மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டதாகவும், சிவில் சர்வீஸில் இருந்தபோது நிர்வாக அனுபவத்தைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
அந்த இரு அனுபவங்களும் தற்போது அமைச்சராக பணியாற்றுவதற்கு பெரிதும் உதவுவதாக கூறிய அவர், இந்த மூன்று பொறுப்புகளில் அரசியலே மிகவும் சவாலானது என குறிப்பிட்டார்.
மேலும், பொதுமக்களின் தொடர்ச்சியான கவனத்தில் இருப்பதால் மிகுந்த பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நிலை அரசியலில் இருப்பதாக அவர் விளக்கினார்.
தமிழ்நாடு ஏற்கனவே மருத்துவத் துறையில் முன்னணி மாநிலமாக இருந்தாலும், தரமான மருத்துவ சேவையை மாநிலத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே அரசின் முக்கிய இலக்கு என அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்காக தனித்துவமான கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்றும், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் இருந்தாலும் புற்றுநோய் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், மனநலப் பிரச்சினைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மருத்துவத் தேவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து அரசு செயல்படும் என உறுதியளித்தார். நீட் தேர்வு குறித்து பேசிய அமைச்சர், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார நிர்வாகம் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டில் அனைத்து மாநில மாணவர்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது நடைமுறையில் சவாலானது என்றும், மையப்படுத்தப்பட்ட சேர்க்கை முறைக்கு மாற்றாக மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
போதைப் பழக்க ஒழிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குற்றங்களுக்கு போதைப் பழக்கம் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதை கட்டுப்படுத்த பள்ளி நிலையிலிருந்தே விழிப்புணர்வு மற்றும் மதிப்புக் கல்வியை வழங்க வேண்டும் என்றார்.
சிறுவயதிலேயே சரியான சமூகப் பொறுப்புணர்வை உருவாக்கினால், எதிர்காலத்தில் குற்றங்களை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.