Saturday, Jul 5, 2025

"மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

thanjavur comments school student suicide religion conversion controversy minister anbil mahesh
By Swetha Subash 3 years ago
Report

12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அண்மையில், தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மாணவியை மதம்மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி உயிரிழந்ததாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வந்த நிலையில்,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையில் அதுபோன்ற எந்த வித குற்றச்சாட்டுகளும் பெறப்படவில்லை என்று கூறினார்.

மேலும், மாணவியை கொடுமைப்படுத்தியதற்கான குற்றச்சாட்டில் விடுதி வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேட்டி அளித்தார்.

“இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்த விளக்கத்தை நாங்கள் பதிவு செய்து வைத்துள்ளோம்.

தஞ்சை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இந்த விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட விடுதி வார்டன், காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இது மட்டுமின்றி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றியும், பள்ளியில் இருந்து படித்து வெளியேறிய முன்னாள் மாணவ, மாணவிகளிடமும் கருத்துக்களை கேட்டுள்ளோம்.

பல அமைப்புகள் பல காரணத்தை கூறியதால், நாங்களும் அந்த கருத்தின் அடிப்படையில் கேட்டதில் இதுவரை யாரும் அதுபோன்று கருத்துக்களை கூறவில்லை.

ஒரு பிரச்சினை என்று வந்தால் உரிய அதிகாரியிடம் கூறி அதற்கு முழுமையாக தீர்வு காணும் பணியில் பள்ளி நிர்வாகம் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து எதையும் மறைக்க வேண்டாம்.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காரணங்கள் எதுவாக இருந்தாலும் மாணவியின் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

அவர்கள் சொல்லும் காரணங்களாக இருந்தாலும் சரி, பிற காரணங்களாக இருந்தாலும் சரி இழந்த உயிரை மீட்டெடுக்க முடியாது.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு காவல்துறைக்கான இரும்புக்கரத்தை என்றைக்குமே வழங்கும். “ என கூறினார்.