பாரதியார் பிறந்தநாள்: 'படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது' - அமித்ஷா தமிழில் பதிவு!
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
பாரதியார் பிறந்தநாள்
மகாகவி பாரதியாரின் 142வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இவர் தனது கவிதைகள் மூலம் தமிழகத்திலிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியவர் ஆவர்.
கவிஞர், மொழி ஆர்வலர், பத்திரிகையாளர் என தமிழர்களின் பெருமையாக விளங்கியவர் பாரதியார். தமிழ் இலக்கிய வரலாற்றில் நவீன கவிதைகளின் முன்னோடியாக இவர் என்றென்றும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அமித்ஷா பதிவு
இந்நிலையில், பாரதியாரின் பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் "சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
ஒரு கவிஞரான மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர். பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர். அவரது வாழ்க்கை சரித்திரமும் அவரது செயல்களும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.