மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு - இன்று நேரில் பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
மிக்ஜாம் புயலால் சென்னையில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று நேரில் பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
சென்னை வெள்ளம்
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கனமழை ஓய்ந்துள்ளதால் சில இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்து வருகிறது.
ஆனால் சில இடங்களில் மழை நீர் வடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று மக்களுக்கு உதவிகளை வழங்கினார். தமிழக அரசும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ராஜ்நாத் சிங்
மேலும், மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளைச் செய்யவுள்ளது. இந்நிலையில் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார்.
அவர் டெல்லியிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். ஆய்வுக்கு பின்னர் பிற்பகல் 1.20 மணியிலிருந்து 1.30 மணி வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதனை தொடர்ந்து மிகஜாம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் குறித்தும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி காட்டப்படுகிறது.