சென்னை வெள்ளம்: நிவாரணப் பணிகளில் ஈடுபட விரைந்து வாருங்கள் - திமுகவினருக்கு முதல்வர் அழைப்பு!
மிக்ஜாம் புயலால் சென்னையில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கனமழை ஓய்ந்துள்ளதால் சில இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்து வருகிறது. ஆனால் சில இடங்களில் மழை நீர் வடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிவாரண பணிகளில் ஈடுபட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக.வினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் "அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிச்சாங் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்! என அவர் பதிவிட்டுள்ளார்.