கொந்தளித்த இந்திய ரசிகர்கள்: ஐபிஎல் தொடரை சீண்டிய முன்னாள் வீரர்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் ஐபிஎல் தொடரை கிண்டலடித்து பேசியது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரையில் 2007-ம் ஆண்டிற்கு பிறகு டி20 போட்டிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளுக்கு பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹோல்டிங்கிடம் நீங்கள் ஏன் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனை செய்வதில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே வர்ணனை செய்வேன் என்று கூறினார்.
இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது . பலரும் இந்த கேள்விக்கு, மைக்கேல் ஹோல்டிங் சற்று நிதானமாக பதிலளித்து இருந்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காலத்துக்கு ஏற்ப போல நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என மைக்கேல் ஹோல்டிங்கிற்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.