“டாட்டா..பாய்”...ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது மும்பை அணி - ஆப்பு வைத்த ஹைதராபாத்

ipl2021 MIvSRH MIPaltan
By Petchi Avudaiappan Oct 08, 2021 06:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 18 ரன்களில் அவுட்டாக, மற்றொரு வீரரான இஷான் கிஷன் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 32 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 236 ரன்கள் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற கணக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் (34 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (33 ரன்கள்) எடுக்க கொஞ்சம் கொஞ்சமாக மும்பை அணியின் பிளே ஆஃப் கனவு தகரத் தொடங்கியது. தொடர்ந்து கேப்டன் மணிஷ் பாண்டே 69 ரன்கள் மற்றும் பிரியம் கார்க் 29 ரன்கள் விளாசியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம்  மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் அதிகப்பட்சமாக பும்ரா, கூல்டர் நைல், நீஷம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

போட்டியில் வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியது.