இதெல்லாம் ஒரு டார்கெட்டா - ராஜஸ்தானை ஓட விட்ட மும்பை அணி
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 23 ரன்களும், ராகுல் திவேதியா 20 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக கூல்டர் நைல் 4 விக்கெட்டுகளும், நீஷம் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளியது.கேப்டன் ரோகித் சர்மா 22 ரன்களில் அவுட் ஆக, மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். இதனால் 8.2 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருந்த மும்பை அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.