எல்லாம் முடிந்துவிட்டது தோல்விக்கு இது தான் காரணம் : வேதனையில் ரோஹித் சர்மா

rohitsharma ipl2022 mivspbk
By Irumporai Apr 14, 2022 05:12 AM GMT
Report

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் தனது 5வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  

தொடர்ச்சியாக நான்கு தோல்வியை சந்தித்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 70 ரன்களும், மாயன்க் அகர்வால் 52 ரன்களும் எடுத்தனர்.  

இதன்பின் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெர்வீஸ் (49), சூர்யகுமார் யாதவ் (43) மற்றும் திலக் வர்மா (36) போன்ற வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுத்தாலும், 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் தோல்வியடைந்தது.

இந்தநிலையில், பஞ்சாப் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, தேவையற்ற ரன் அவுட்கள் போட்டியை மாற்றிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.  

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்கிறோம், எங்கள் பலவீனம் என்ன என்பதை கூட கண்டறிய முடியவில்லை, ஏனெனில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகவே விளையாடி வருகிறோம்.

இந்த போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வரை வந்துவிட்டோம், தேவையற்ற இரண்டு ரன் அவுட்கள் எங்கள் முயற்சியை வீணடித்துவிட்டது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசினார், அவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

நாங்கள் இந்த போட்டியில் வேறு மாதிரியான மனநிலையுடன் தான் எதிர்கொண்டோம், ஆனால் அதுவும் எங்களுக்கு பயனளிக்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவதே சிறப்பானதாக இருக்கும்.

இந்த ஆடுகளத்தில் 198 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான், ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது ஆனால் நாங்கள் தோல்வியடைந்துள்ளது வேதனையளிக்கிறது. தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற போராடுவோம்” என்று தெரிவித்தார்.