ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல - கொல்கத்தா அணியின் விளையாட்டை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா (33) மற்றும் டி காக் (55) ஆகியோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் குவித்து கொடுத்தனர்.
சுப்மன் கில் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மற்றொரு துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை துவம்சம் செய்து 30 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராகுல் திரிபாதியும் தன் பங்கிற்கு மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை சிதறடித்து 42 பந்துகளில் 74* ரன்கள் குவித்ததன் மூலம் 15.1 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றுள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு காரணமான வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி போன்ற வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.