மரண அடி அடித்த மும்பை அணி - கால்குலேட்டர் கணக்கு பலிக்குமா?
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 235 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 18 ரன்களில் அவுட்டாக, மற்றொரு வீரரான இஷான் கிஷன் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 32 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 236 ரன்கள் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற கணக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.