முடிவுக்கு வந்த மும்பை அணியின் பிளே ஆஃப் கனவு - வேதனையில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்ற அசத்தல் வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் கனவும் முடிவுக்கு வந்துள்ளது.
சார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. தொடர்ந்து 172 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய ராஜஸ்தான் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் கனவும் முடிவுக்கு வந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் பேசிய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, கொல்கத்தா அணி எங்களுக்கு முன்பாக போட்டியில் விளையாட உள்ளதால், அவர்களது ஆட்டத்தை பார்த்துவிட்டு தேவைக்கேற்ப விளையாடி ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறுவோம் என தெரிவித்திருந்தார்.
ஆனால் கொல்கத்தாவின் இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் அணியை 170+ ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நெட் ரன் ரேட்டை மும்பையால் தாண்ட முடியும் என்பதால் மும்பை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.