இன்னும் ஒரு மேட்ச் தோற்றால் அவ்வளவு தான் - மோசமான சாதனையை படைக்குமா மும்பை அணி?
2022 ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் அணியான மும்பை அணி மோசமான சாதனை ஒன்றை படைத்து விடுமோ என ரசிகர்கள் அச்சப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக 5 முறை சாம்பியன் அணியான மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பழைய அணிகள் தொடங்கி புதிதாக வந்த 2 அணிகளும் அவர்களை ஒருகை பார்த்து விட்டதால் என்ன செய்வதென்றே தெரியாமல் அணி நிர்வாகம் விழி பிதுங்கியுள்ளது.
இதனிடையே இதுவரை மும்பை விளையாடிய 6 போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 6 போட்டியில் மும்பை அணி முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளது.
அதேசமயம் ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி 2013 ஆம் ஆண்டு சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 6 போட்டியிலும், பெங்களூரு அணி 2019 ஆம் ஆண்டு முதல் 6 போட்டியிலும் தோல்வியை தழுவிய நிலையில் அந்த பட்டியலில் மும்பை அணி இணைந்துள்ளது. அடுத்ததாக அந்த அணி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னை அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டியில் மும்பை அணி தோற்கும் பட்சத்தில் ஐபிஎல் சீசன்களிலேயே முதல் முறையாக தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனை ஒன்றை படைத்து விடுமோ என ரசிகர்கள் பயந்து வருகின்றனர்.