இப்படி இருந்தா எப்படி வெற்றி கிடைக்கும்? - மும்பை அணியை விளாசிய முன்னாள் வீரர்
ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 15 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள், இந்நாள் சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகள் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குறிப்பாக மும்பை அணி கடைசியாக விளையாடிய கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் எதிர்பாராதவிதமாக மோசமான தோல்வியை தழுவியது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இதனால் அடுத்த போட்டியில் அவரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே அடுத்த போட்டியில் டேனியல் சாம்ஸ்க்கு பதில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலோ காயமடைந்தாலோ அவருக்கு பதிலாக விளையாட கடந்த வருடம் வரை நாதன் கூல்டர் நைல் இருந்தார். ஆனால் தற்போது உள்ள மும்பை அணியின் பின்வரிசை வீரர்களை பார்க்கும் போது எந்த ஒரு வீரரும் இவர்களுக்கு மாற்றாக களமிறங்கும் அளவுக்கு இல்லை.
எனவே இந்த வருடம் மும்பையின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு அணியின் பேட்ஸ்மேன்கள் கடினமாக உழைக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சீசன்களில் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தின் போது கோட்டை விட்டதால் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் சேவாக் கூறியுள்ளார்.