மும்பை அணியில் இணையும் பழைய வீரர்.. இனிமேலாவது வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பழைய வீரர் ஒருவர் இணையவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடர் முன்னாள், நடப்பு சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகளுக்கு மிகப்பெரிய சோதனையான ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி உள்ளது. இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ள நிலையில் மும்பை அணி கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறி விட்டது. அதேசமயம் எஞ்சியுள்ள சீசனை முடிக்கும் போது சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மும்பை உள்ளது.
இதனால் அணியில் சில மாற்றங்களை செய்யவுள்ளது. அந்த வகையில் மும்பையில் பும்ரா, உனட்கட், மில்ஸ், பாசில் தம்பி போன்ற எந்த பந்துவீச்சாளரும் சரியாக பந்துவீசாததால், நடப்பு சீசனில் அனைத்து அணியை விட மோசமான எக்னாமியை வைத்துள்ளது.
இதனால் மும்பை அணி 33 வயதான தங்களது ஆஸ்தான பந்துவீச்சாளரான குல்கர்னியை அணியில் சேர்த்துள்ளது. இதனையடுத்து தவால் குல்கர்னி பயோ பபுளில் வந்து இணைந்துள்ளார். பயிற்சி முகாமில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்த்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே மும்பை அணியில் அர்சத் கான் என்ற வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாடும் இடதுகை சுழற்பந்துவீச்சாளராக குமார் கார்த்திக்யே சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி ஓப்பந்தம் செய்துள்ளது.