முதல்வர் எடப்பாடிக்கு எம்ஜிஆரின் வெண்கலச் சிலை பரிசு கொடுத்த விவசாயிகள்! ஏன் தெரியுமா?
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாணிக்கம், வீரப்பன். இவர்கள் இருவரும், நேற்று முன்தினம், கும்பார அள்ளி பகுதியில் முதல்வரை வரவேற்கக் காத்திருந்த கூட்டத்தில் தட்டு ஒன்றில் சிலைகளை வைத்தபடி காத்துக் கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் முண்டியடித்தபடி முதல்வரை நெருங்கி விவசாயிகள் இருவரும் தங்கள் பரிசைக் கொடுத்தபோது மலர்ந்த முகத்துடன் அவற்றை பெற்றுக் கொண்ட முதல்வர், 'ரொம்ப சந்தோஷம்' என்றுக் கூறி அவர்களது தோளைத் தட்டி அனுப்பினார்.
முதல்வருக்கு பரிசளித்த உற்சாகத்தில் அவர்கள் பேசுகையில், ''பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'விவசாயி' திரைப்படத்தில் தோன்றுவதைப்போல ஏர்க்கலப்பை மற்றும் உழவு மாடுகளுடன் நிற்கும் எம்ஜிஆரின் வெண்கலச் சிலையை முதல்வருக்கு பரிசளித்திருக்கிறோம்.
அத்துடன், அம்மன் சிலை ஒன்றையும் அளித்திருக்கிறோம். இவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்றாலும், அரசு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்ததில் மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.