சென்னையில் கனமழை - பொதுமக்கள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தலாம்
சென்னையில் கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மெட்ரோ ரெயில்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் மெட்ரோ ரெயில் சேவை 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.