பிரியாணி கடையில் ரகளை செய்த திமுக கவுன்சிலரின் மைத்துனர் - கடுப்பாகும் பொதுமக்கள்
சென்னை திருநீர்மலையில் பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ரகளை செய்த திமுக கவுன்சிலரின் மைத்துனர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் அனீஷ் என்பவர் பிரியாணி கடைமற்றும் டீ ஸ்டால் என இரண்டு கடைகளை நடத்தி வருகிறார். இவரது கடைக்குச் சென்ற திருநீர்மலை ரங்கா நகர் 2வது தெருவில் வசித்து வரும் சுகுமார் மற்றும் தினேஷ் என்ற இருவர் அனீஷிடம் மாதம் மாதம் 10.000 ரூபாய் செலவிற்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடை நடத்த விடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன அனீஷ் ரூபாய் 3,000 மட்டும் கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். ஆனால் மீதமுள்ள 7,ஆயிரம் ரூபாயை உடனே தரும்படி கேட்டு சுகுமார், தினேஷ் மிரட்டியுள்ளனர். இதற்கு அனீஷ் மறுக்கவே ஆத்திரத்தில் இருவரும் சாலையில் இருந்த கற்களை எடுத்து கடையை நோக்கி வீசியுள்ளனர். இதில் கடையில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறியது.
இதனைக் கண்ட கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர். இதற்கிடையில் சுகுமார், தினேஷ் அங்கிருந்து தப்பிக்க நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி வியாபாரிகள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சேதமடைந்த கடைகளை பார்வையிட்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
இதனையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட சுகுமார், தினேஷ் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுகுமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பல்லாவரம்,பம்மல் அதன் சுற்றியுள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது. மற்றொரு நபரான தினேஷ் தாம்பரம் மாநகராட்சியின் 31வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சித்ரா முரளிதரனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.