'தமிழக வாழ்த்துக் கழகம்' - நடிகர் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
அரசியல் கட்சி தொடங்கியது முதல் நடிகர் விஜய் வாழ்த்து மட்டுமே கூறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், 2024 மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை.
அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று அறிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியையும் அறிமுகம் செய்திருந்தார். அதேபோல் பள்ளி பொதுத் தேர்வுகள், அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்களில் வாழ்த்து தெரிவித்து அறிக்கை மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கும், மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
விமர்சனங்கள்
இந்நிலையில் கட்சி தொடங்கியது முதல் நடிகர் விஜய் வெறும் வாழ்த்து மட்டுமே கூறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு மீம்ஸுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இது தமிழக வெற்றிக் கழகம் அல்ல தமிழக வாழ்த்துக் கழகம் என்றும் கலாய்த்து வருகின்றனர். மேலும், நடிகர் விஜய் தெரிவித்த அனைத்து வாழ்த்துக்களையும் ஒன்றிணைத்து "நடிகர் விஜய் சொன்ன வாழ்த்துக்கள்" என்ற பெயரில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் கொதித்துப் போன அவரது ரசிகர்கள் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஆனால், சிஏஏ சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டபோது "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல" என்று தனது அறிக்கையின் மூலம் விஜய் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.