மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் தீர்மானம் - ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
முதல்வர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகதாது அணை விவகாரம்
கர்நாடக முதல்வர் டி .கே .சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு திட்ட அனுமதி வழங்க கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் பிரதமர் மோடியிடனும், ஜல் சக்தி அமைச்சர் சி ஆர் பட்டேலிடமும் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உபரிநீர் கிடைக்காது, அப்படி கிடைக்காமல் போனால் காவிரி டெல்டா பகுதிகள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும் எனவே இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
முதல்வர் விஜய் தீர்மானம்
இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தீர்மானம் கொண்டுவந்து அதனை முன்மொழிந்தார்.

இதில் பேசிய முதலமைச்சர் விஜய், "காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும்.
ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது" என பேசியுள்ளார்.
அதைத்தொடர்ந்து தனிதீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.
இதனைத்தொடர்ந்து தீர்மானத்தை அனைவரும் ஆதரித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.