மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டம்: கர்நாடக துணை முதல்வர்

Tamil nadu Karnataka
By Vinoja Jun 18, 2026 03:47 PM GMT
Report

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாது அணை தமிழ்நாட்டுக்கே நன்மை பயக்கும் திட்டம். அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென் இந்திய மாநிலங்களுக்கே இதயம் போன்றது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகியது. 

மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டம்: கர்நாடக துணை முதல்வர் | Mekedatu Dam Is Beneficial Only For Tamil Nadu

அப்போது உரையாற்றிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணையில் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

மேலும், மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், வேளாண்மை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டுக்குரிய நீரை உரிய காலத்தில் பெற்றுத் தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மாறாக, மேகதாது அணை தமிழ்நாட்டுக்கே நன்மை பயக்கும். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென் இந்திய மாநிலங்களுக்கே முக்கியமான திட்டமாக இருக்கும்.

மேகதாது அணை ஒரு ‘பேலன்சிங் ரிசர்வாயர்’  அதிலிருந்து ஒரு பக்கெட் தண்ணீர்கூட பாசனத்திற்காக பயன்படுத்தப்படாது” என்று கூறினார்.