தமிழகத்தில் 3-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது- மக்கள் தடுப்பூசி போட ஆர்வம்
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்.19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று (26-9-2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
முன்னதாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த ரத்த தான சிறப்பு முகாமை, செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்த பின் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லட்சங்களில் இருந்தது; ஆயிரமாக குறைத்து உள்ளோம்.
ஆனால், தற்போது 1,500ல் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை, 1,700 ஆக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருந்தாலும், கொரோனா சூழ்நிலையை புரிந்து பொது மக்கள் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோரில் 56 சதவீதம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இரண்டாவது தவணையை பொறுத்தவரை 17 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி கொண்டுள்ளனர். அந்த வகையில், 22 லட்சம் பேர், இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர்.
முதியவர்கள் முதல் அனைவரும் கட்டாயம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதேபோல, விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கூட்டமாக கூடுவது, முக கவசங்களை முறையாக அணியாதது போன்றவற்றால் தொற்று அதிகரிக்கிறது.
காய்ச்சல் வந்த உடனேயே காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து, முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
அதன்படி, ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை, மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.