பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு -தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநிலம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
குறிப்பாக கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (17 ஆம் தேதி) தமிழகத்தில் இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தடுப்பூசி குறைவாக இருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகளைப் பெறும் பணி நடைபெற்றதாலும் அந்த முகாம் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன.
காலை 7 மணிக்குத் தொடங்கும் தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.