தயாரிப்பாளர்களுக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்த மீரா மிதுன் - விடுதலை ஆவாரா?
நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி சென்னை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை வருகிறது. நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துகளை யூடியூப்பில் வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் மீராமிதுனும், அவரது நண்பரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், என்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் பட்டியலின சமுதாயத்தை பற்றி தவறாக பேசி விட்டேன்.
அது தவறு என தெரிந்ததும், அவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவித்தேன். பட்டியலின மக்களோடு நட்புடன் இருந்து வருகிறேன்.

பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் என்னை கைது செய்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.