நடிகை மீரா மிதுன் தலைமறைவு - பெங்களூரில் போலீசார் தீவிர வேட்டை
நடிகை மீரா மிதுன்
பெங்களூரில் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய போலீசார் பெங்களூருக்கு விரைந்துள்ளனர். நடிகை மீரா மிதுன் நடிகை மீரா மிதுன், மாடலிங் மற்றும் அழகுப் போட்டிகளில் பங்கேற்றது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோ-வான 'ஜோடி நம்பர் ஒன்', சீசன் 8-ல் கலந்துக்கொண்டார். பிறகு, 'பிக் பாஸ் சீசன் 3' ல் கலந்துக் கொண்டார். 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்குப் பிறகு மீரா பல சர்ச்சைகளில் சிக்கினார்.
மீரா மிதுன் கைது
அதில் சூர்யா, ஜோதிகா, விஜய் மற்றும் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் மீது சமூக வலைதளங்களில் வார்த்தை தாக்குதல் நடத்தினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதைத்தொடர்ந்து இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மீரா மிதுன் தலைமறைவு
இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாமல் வருவதால், அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் இவ்வழக்கு நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீண்டும் மீராமிதுன் ஆஜராகவில்லை. ஆனால், அவரது நண்பர் சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார்.
இதனையடுத்து, போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம் என்று கூறினார். இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.