மீரா மிதுன் மீது பாயும் குண்டர் சட்டம்- காவல்துறையினர் அதிரடி
நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடலிங் தொழில் செய்து வந்த நடிகைமீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகர்கள், இயக்குனர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வந்தார். சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
மீராமிதுனின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் வன்னி அரசு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் மீரா மிதுன் போலீசில் ஆஜராகாத நிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.