சிறையிலிருந்து வெளியே வந்தார் மீரா மிதுன்
நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று வெளியே வந்தார்.
சமீபத்தில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
மேலும், மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீரா மிதுன் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றதில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.