மீராமிதுனுக்கு நேரம் சரியில்லை - மீண்டும் சிக்கலில் சிக்குகிறார்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நீதிமன்றத்தையும் போலீஸையும் மதிக்காமல் நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன்,அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றனர். தொடர் முயற்சிக்கு பிறகு ஜாமீனில் மீரா மிதுன் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகை மீரா மிதுன் மற்றும் அவர் நண்பர் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதன் நகல்களை கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் நேற்று நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தபோது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரான நிலையில், நடிகை மீரா மீதுன் ஆஜராகவில்லை.
ஜாமீன் வழங்கியபோது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் மீராமிதுன் நிறைவேற்றவில்லை இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி நிபந்தனையை நிறைவேற்றவில்லை ஏன்றால் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தினார். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அன்று ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து மீரா மிதுன் நீதிமன்றத்தை இப்படி அவமதித்துக் கொண்டிருந்தால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.