தடுப்பூசி போட்டால் மட்டுமே மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி - அதிரடி உத்தரவு
கொரோனா தடுப்பூசி இரண்டு ‘டோஸ்’ போட்டவர்கள் மட்டுமே வரும் 13 ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தமிழகத்திலேயே மதுரை மிகவும் பின்தங்கியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், காந்தி மியூசியம், திருமலைநாயக்கர் மஹால் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் நாடு முழுவதும் இருந்து வருகிறார்கள். வெளிநாட்டினரும் வருகை தருகிறார்கள். தற்போது புதுவகை ஒமைக்காரன் தொற்றும் பரவுவதால் மாவட்ட நிர்வாகம், கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதித்துள்ளது.
மேலும் தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து வீடு தேடிச் சென்று தடுப்பூசி போட வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடாதவர்கள் வரும் 13 ஆம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதிக்காது என்று அதன் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் அல்லது கைபேசியில் பதவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.