ரீல்ஸ் மோகம்.. மருத்துவமனையில் நடனமாடி வீடியோ வெளியிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள்!
நோயாளிகளின் முன்பாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் ரீல்ஸ்
கர்நாடக மாநிலம் கடாக்கில், கடாக் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஜிம்ஸ்) மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையிலேயே திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர்.
பின்னர் அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ்களாக வெளியிட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை மையம், பிரசவ வார்டு என மருத்துவமனையின் பல தளங்களில் நடனமாடி இருக்கின்றனர்.
மாணவர்கள் இடைநீக்கம்
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நோயாளிகளின் முன்னிலையில் மாணவர்கள் நடனமாடியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்தும் பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் மோசமான நடவடிக்கைக்காக 38 மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடனமாடிய மாணவர்களில் இடம்பெற்றிருந்த 15 ஹவுஸ் சர்ஜன் மாணவர்கள் வரும் ஏப்ரல் மாதத்துடன் தங்களது படிப்பை வெற்றிகரமாக படித்து பட்டம் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.