மீடியா ஒன் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - விரைவில் மறுஒளிபரப்பு

மலையாளத்தில் பிரபலமான மீடியா ஒன் சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த தடையை தற்காலிகமாக நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மிகப்பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான மீடியா முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு தடை விதித்தது. ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு ஆதரவு கொடுத்ததாகவும், கடந்த 2020அஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து இந்த சேனல் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மத்திய அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே மீடியா ஒன் சேனலுக்கான உரிமத்தை புதுப்பிக்கக் கோரி கடந்த ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்று கூறி சேனலை உரிமத்தை புதுப்பிக்க மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மறுத்துவிட்டதால் ஒளிபரப்பும் முடங்கியது. இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கேரள நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தது. இதையடுத்து மீடியா ஒன் சேனல் நிறுவனத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அப்போது மத்திய அரசு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் நேற்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே தொலைக்காட்சியை நம்பி 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் , ஒளிப்பதிவாளர்கள், உள்ளிட்ட பலர் பணியாற்றி வரும் நிலையில் மத்திய அரசின் முடிவால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மீடியா ஒன் செய்தி சேனல் மீது மத்திய அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதேபோல் சேனல் ஒளிபரப்பை மீண்டும் தொடங்க அனுமதியளித்துள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.