ஈழத்தின் போராட்டத்தை உரக்கச் சொல்லும் மேதகு
ஈழத்தமிழர் வரலாற்றைப் பற்றியும், வீரஞ்செறிந்த இறுதிகட்ட போர் பற்றியும் உண்மைக்கு மாறான திரைப்படங்கள் வரிசைகட்டி வரும் நிலையில் சத்தமே இல்லாமல் போராட்டத்தின் உண்மை நிலையை உரக்க சொல்கிறது "மேதகு" திரைப்படம்.
தமிழில் காற்றுக்கென்ன வேலி, கன்னத்தில் முத்தமிட்டால், பேமிலி மேன், ஜெகமே தந்திரம் போன்ற திரைப்படங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈழத் தமிழர் குறித்து பேசியுள்ளன. ஆனால் அவற்றில் எதிலும் உண்மைத் தன்மை இல்லை.
இன்னும் சொல்லப்போனால் உண்மைக்கு மாறான, அரசியலையே அவை பேசின. ஆனால் மேதகு பிரபாகரன் பிறந்த 1954 முதல் 1975 வரையிலான முதல் 21 ஆண்டுகளை சுருக்கமாக இத்திரைப்படம் பேசுகிறது.
1995-ம் ஆண்டு மதுரையில் அடைக்கலம் தெருக்கூத்து குழுவினர், கதை சொல்வது போல திரைப்படம் தொடங்குவதோடு ஆங்காங்கே சிறு சிறு குறியீடுகள் மூலமாகவும் தமிழீழம் பற்றிய கருத்துகள் வெளிப்படுகிறது.
படத்தில் 2 விஷயங்கள் தெளிவாக பேசப்பட்டுள்ளன. ஒன்று தமிழர்கள் மீதான தாக்குதல்களும், ஆயுதம் ஏந்த காரணங்களும். மற்றொன்று இலங்கை அரசியலில் புத்த பிட்சுக்களின் பங்கு இன்றளவும் எந்த அளவு ஆழமானது என்பதையும் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
அறிமுகஇயக்குநர் கிட்டுவுக்கு இது மிகப்பெரிய களம்.அதனை திறமையாக கையாண்டுள்ளார். அதேபோல் கதாபாத்திர தேர்வுகள், பின்னணி இசையில் பிரவீன்குமாரின் உழைப்பு, ரியாஸின் ஒளிப்பதிவும் என அனைத்துமே சிறப்பு.
பிரபாகரனின் வாழ்க்கை பற்றிய முதல் திரைப்பட காட்சி வடிவமாக வெளியாகியுள்ள மேதகு என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் ஒரு காவியம்..