மக்கள் முடிவு செய்ய வேண்டும்; அண்ணாமலை பேசுவது சர்வாதிகாரத்தனம் - துரை வைகோ!
இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
துரை வைகோ
மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளருமான துரை வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
இது நூறு சதவீதம் நடக்கும். இண்டியா கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். இந்த உண்மை இன்னும் 48 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு தெரியவரும்" என்றார்.
சர்வாதிகாரத்தனம்
அப்போது தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இண்டியா கூட்டணி காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ "அண்ணாமலை அரசியலுக்கு வந்தது முதல் தவறான கருத்துக்களை, வதந்திகளை மட்டுமே சொல்லி வருகிறார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இண்டியா கூட்டணி காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து. அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியையும் காணாமல் போய்விடும் என்று யாரும் சொல்ல முடியாது. அது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அண்ணாமலை பேசியது சர்வாதிகாரத்தனமான பேச்சு" என்று தெரிவித்துள்ளார்.