மதிமுக கட்சி 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது
திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்,6 தொகுகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாடு கண்ட திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும் வழங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்ற ஒப்பந்தத்தில், வைகோவும், மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உளப்பூர்வமான முடிவு என்றார்.
இதற்கிடையே, மதிமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யாவும், மதுரை வடக்கில் புதூர் பூமிநாதனும், கிணத்துக்கடவில் ஈஸ்வரனும், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமாரும், சிவகங்கையில் புலவர் சிவந்தியப்பனும், திருச்சி கிழக்கு தொகுதியில் டாக்டர் ரொகையாவும் போட்டியிட கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.