இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - மா. சுப்பிரமணியன்!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் மா. சுப்பிரமணியன்.
விண்ணப்பங்கள்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்ற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான மாணவர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும் 2 பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளது. இதில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது.
மீதமுள்ள இடங்கள் தமிழ்நாடு மாநில இடங்களாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 40,193 பேர் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்தில் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசை
இதில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்த விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவன் முதல் இடத்தில் உள்ளார். சென்னையை சேர்ந்த சூர்யா சித்தார்த் 715, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் 715 ஆகிய மாணவர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அரச பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேலத்தைச் சேர்ந்த கிருத்திகா 569 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாணவன் 560 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 2662 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.