சினிமா வசனம் பேசி கைத்தட்டல் வாங்கும் விஷயமல்ல பேரிடர் - நடிகர் விஷாலுக்கு, மேயர் பிரியா பதிலடி!

Vishal Tamil nadu Chennai Priya Rajan Michaung Cyclone
By Jiyath Dec 06, 2023 04:50 AM GMT
Report

மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக கேள்வி எழுப்பிய நடிகர் விஷாலுக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

நடிகர் விஷால் 

மிக்ஜாம் புயலால் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சினிமா வசனம் பேசி கைத்தட்டல் வாங்கும் விஷயமல்ல பேரிடர் - நடிகர் விஷாலுக்கு, மேயர் பிரியா பதிலடி! | Mayor Priya Befitting Reply To Actor Vishal

மேலும், மாநகரம் முழுவதும் பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015ஆம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம்.

முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள்" என அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

சென்னை வெள்ளத்தில் தத்தளித்த நடிகர்கள்; மீட்ட தீயணைப்பு துறை - உதவிய நடிகர் அஜித்!

சென்னை வெள்ளத்தில் தத்தளித்த நடிகர்கள்; மீட்ட தீயணைப்பு துறை - உதவிய நடிகர் அஜித்!

மேயர் பிரியா பதிலடி 

இந்நிலையில் விஷாலின் இந்த பேச்சுக்கு பதிலடி குடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார்.

சினிமா வசனம் பேசி கைத்தட்டல் வாங்கும் விஷயமல்ல பேரிடர் - நடிகர் விஷாலுக்கு, மேயர் பிரியா பதிலடி! | Mayor Priya Befitting Reply To Actor Vishal

திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்! 2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது. அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். பல ஆண்டுகளில் வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால்தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள்.

23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!" என மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார்.