அன்னவாசலில் போலீசார் மீது திமுகவினர் கற்கள் வீச்சு - போலீசார் தடியடி
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள்; 138 நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள்; 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கான மறைமுக தேர்தல், இன்று நடக்கிறது.
சென்னை,திருச்சி, உள்ளிட்ட நகரங்களில் மாநகராட்சி மேயர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் பேரூராட்சி தலைவரை தேர்தெடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு கூடியிருந்த திமுகவினர் போலீசார் மீது கல் வீச தொடங்கினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.இதையடுத்து கல்வீச்சு சம்பவத்தை அடுத்து திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் அப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது.அன்னவாசல் பேரூராட்சியில் 9 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.