பொங்கல் பண்டிகைக்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று 500-ஐ எட்டக்கூடும் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா தொற்று வேகமெடுக்கும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக,
அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் கூறியதாவது,
“மயிலாடுதுறையில் கடந்த ஓரிரு நாள்களாக கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 500-ஐ எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனை எதிர்கொள்ளும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சை பெற மாவட்டத்தில் 6 இடங்களில் தலா 250 படுக்கைகளுடன் சிசிசி மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டும் இன்றி ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் டேங்க் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள டிராஜின் சென்டர்களில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி போடாதவர்களால் தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கக்கூடும் சூழல் உருவாகியுள்ளது.
ஆதலால், அனைவரும் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப கூடாது என்றும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது தடுப்பூசி மட்டும் தான்.
அதனால் சனிக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் அனைவரும் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.