மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
மயிலாடுதுறை மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை 24 கடந்த மார்ச் 2020 அன்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தை, தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக காணொலிக் காட்சி வாயிலாக 28 டிசம்பர் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
லலிதா ஐ.ஏ.எஸ்
மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய 12 சூலை 2020 அன்று சிறப்பு அதிகாரியாக ஆர்.லலிதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, 05.02.2023 வரை இவரே அந்த மாவட்டத்தின் ஆட்சியாளராக செயல்பட்டார்.
2009 பேட்ச் அதிகாரியான லலிதா ஐ.ஏ.எஸ், சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 12 வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனால் இவருக்கு தமிழ்நாட்டு கேடரில் இடம் கிடைத்தது. முன்னதாக சென்னை மாநகராட்சி இணை ஆணையர், தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.
மாசு கட்டுப்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் பயணித்து மற்றும் நடந்து சென்றார். 05.02.2023 அன்று இவருக்கு பதிலாக மகாபாரதி ஐ.ஏ.எஸ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மகாபாரதி ஐஏஎஸ்
மகாபாரதி ஐஏஎஸ் மதுரை மாவட்டம் சுண்ணாம்பம்பூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், தினமும் 18 கிமீ நடந்தே பயணம் செய்து தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். விபத்தில் தனது வலது கையை இழந்த இவர், இடது கையால் எழுதும் பழக்கம் கொண்டவர். TNPSCயின் குரூப்3 தேர்வில் தேர்ச்சி பெற்று கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இதன் பின்னர் குரூப்1 தேர்வு எழுதி கருவூல துறையில் பணியில் சேர்ந்த இவர் அதன் கருவூல நதுறையில் கூடுதல் இயக்குநர் வரை பதவி உயர்வு பெற்றார். இதனிடையே Digitization, e-Governance போன்ற பணிகளை சிறப்பாக முன்னெடுத்ததற்காக இவரது துறைக்கு விருது கிடைத்தது. இவரின் சீரிய பணிக்காக தமிழக அரசு இவரை UPSCக்கு பரிந்துரை செய்தது. அங்கு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், IAS ஆக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றி வந்த இவர், 05.02.2023 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தின் 2வது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். புகையிலை போன்ற போதை பொருட்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதால் மத்திய அரசின் விருது பெற்றார். மக்கள் எளிதில் அணுகும் வகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் என மயிலாடுதுறை மாவட்ட மக்களிடம் பெயர் பெற்றுள்ளார்.