மே 2ம் தேதிக்கு மேல் இன்னொரு ஊரடங்கை மக்களால் சமாளிக்க முடியாது - முக ஸ்டாலின் கருத்து

corona lockdown increase may resist
By Praveen Apr 24, 2021 01:50 PM GMT
Report

மே-2 ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் மக்களும்-வாழ்வாதாரமும் இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. முதல் கொரோனா அலையில் கிடைத்த அனுபவங்களை வைத்து தொலைநோக்குத் திட்டத்தை தயாரிக்கத் தவறிவிட்டது அரசு.

தமிழ்நாட்டில் சுகாதார உட்கட்டமைப்பு நமக்கு வரப்பிரசாதம் என்றாலும் - அதற்கு ஏற்ற திட்டமிடல் இருந்தால் மட்டுமே மக்களைப் பாதுகாக்க முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைவதற்கும் - தற்போது அதிகாரிகள் செயல்பாட்டிற்கும் இடையே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது. ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிப்பது, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தயார் நிலையில் வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தற்காலிக மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டிட வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் - பரிசோதனைகளைச் செய்து - நோய்ப் பரவல் ஏற்படாமல் தடுத்திட வேண்டும். முகக்கவசம் அணிவதை ஒரு மக்கள் இயக்கம் போன்ற பிரச்சாரமாகவே செய்திட வேண்டும். தலைமைச் செயலாளர் அவர்களும் - அவரின் கீழ் உள்ள அனைவரும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் - தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைத்திடவும் செயல்பட்டிட வேண்டும்.

மே-2 ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் மக்களும்-வாழ்வாதாரமும் இல்லை. ஆகவே 'காபந்து சர்க்கார்' இருக்கின்ற ஒரு வாரத்தில் கொரோனா பரவலை தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.