மேட்ரிமோனியில் 32 பெண்களை ஏமாற்றிய நைஜீரிய கும்பல் - திடுக்கிடும் தகவல்
மேட்ரிமோனியல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த 32 பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
மேட்ரிமோனியல் மூலம் பெண்களை மோசடி செய்த விவகாரத்தில் கடந்த 3ஆம் தேதி பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இரண்டு நைஜீரியர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மூன்று நாட்கள் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 2ஆவது திருமணத்திற்காக மேட்ரிமோனியல் வெப்சைட்டில் பதிவு செய்பவர்களை குறிவைத்து மோசடி செய்ததாக நைஜீரியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பெண்களிடம் சுமார் ரூ. 1.5 கோடி நைஜீரியர்கள் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் மேட்ரிமோனியல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லி உத்தம் நகரில் பதுங்கி இருக்கும் பெண் உட்பட மீதமுள்ள 5 பேரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.
மோசடி செய்வதற்காகவே ஸ்டூடன்ட் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் போலி ஆவணங்களுடன் நைஜீரியர்கள் இந்தியாவிற்குள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாலையோரத்தில் தங்கும் ஏழை மக்களின் ஆவணங்களை பயன்படுத்தி வங்கிக்கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளை வாங்கி பெண்களை நைஜீரியர்கள் ஏமாற்றியுள்ளனர்.
3 நாள் காவலில் எடுத்து விசாரணை முடிந்தவுடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.