செய்தியாளர் முதல் ஆதினம் வரை - அருணகிரிநாதர் கடந்த வந்த பாதை

மதுரை ஆதீன மடம் தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக பொறுப்பு வகித்துள்ளனர். 292 ஆவது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (அருணகிரி) என்பவர் ஆதீனமாக பொறுப்பேற்றார்.

77 வயதான இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக இருந்துவந்தார். தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அருணகிரிநாதர், மதுரை ஆதீனத்தின் இளவரசராக 1975-ம் ஆண்டு மே 27-ம் தேதி பொறுப்பேற்றார்.

291வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் பூரணம் அடைந்த பிறகு, 1980ஆம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார். அன்று முதல் அவர் 292 ஆவது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் என அழைக்கப்பட்டு வருகிறார்.

ஆன்மிக பணிக்கு வருவதற்கு முன் ஒரு மாலை நாளிதழில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். புல்லட் வண்டி இவருக்கு பேவரைட் என்பதால் இப்பவும் அதை மதுரை மடத்தில் ஞாபகத்துக்காக வைத்திருக்கிறார். 1980 ஆண்டில் இருந்து தொடர்ந்து 40 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் அருணகிரிநாதர், முதல் 23 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.

ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில், இவர் சொற்பொழிவாற்றி இருக்கிறார். எம்.ஜி.ஆர், கலைஞர், கி.வீரமணி, பழ.நெடுமாறன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தார். ராமேசுவரத்தில் நடந்த கச்சத்தீவை மீட்கும் போராட்டத்தில் 1985-ல் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ் மொழி, சைவ நெறி பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், அதற்கு பின் 1990 களில் நடராஜனுடன்(சசிகலா கணவர்) நட்பு ஏற்பட்ட பின்புதான் இவர் மீது சர்ச்சைகள் எழத் தொடங்கியது. இவர் ஆதீனமாக பொறுப்பேற்ற பின்னர் அரசியல்வாதிகள், பிரபலங்கள் உடன் தொடர்பு வைத்து மடத்தின் மரபையும், மாண்பையும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார் என்ற புகார்களும் எழுந்தன.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அதிமுக விழாக்களில் இவரை அதிகமாக காண முடிந்தது. 2016 இல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக கூட அறிவித்தார். பின், 2017 ஆம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் அவருடைய தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.

சமீபத்தில் பொறுப்பேற்ற திமுக அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்தும் அறிக்கை வெளியிட்டு, "ஜோ பைடனும், கமலா ஹாரிசும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என இரண்டு வருடத்திற்கு முன்பே அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் கூறி இருக்கிறேன்" என்றார்.

ஆதீனம் மடத்திற்கு சொந்தமான 1,500 ஏக்கர் விவசாய நிலத்தை பக்தர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்து பின்னர் இருவருக்கும் குத்தகை விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அவரை நீக்கினார். மேலும், தகுதி அல்லாத சிலரை இளைய ஆதீனமாக நியமித்தது, பெண்கள் சிலரை மடத்தை நிர்வகிக்க அனுமதித்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர், அதீன மடத்தின் சம்பிரதாயப்படி திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்து அவரை இளைய ஆதீனமாக நியமித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சுவாச கோளாறு, வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு அடிக்கடி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை ஆதினம் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்