உலகக் கோப்பை வென்றால்தான் பெஸ்ட் கேப்டனா? - ஆகாஷ் சோப்ரா கவலை!
உலகக் கோப்பை வென்றால்தான் பெஸ்ட் கேப்டனா என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டித்தூக்கியது. ஒருபுறம் நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் இந்திய அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக, விராட் கோலியின் தலைமைதான் தோல்விக்குக் காரணம், அவரை உடனே அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
மேலும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய அணியும் கடந்த 7 வருடங்களாக ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை.
2013ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2014-ல் டி20 உலகக் கோப்பை, 2016, 2019-ல் நடைபெற்ற உலகக் கோப்பை, தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இதில் அனைத்திலும் இந்திய அணி அரையிறுதி, இறுதிப் போட்டிவரை முன்னேறியும் கோப்பை வெல்ல முடியவில்லை.
கோப்பை வென்று தரமுடியாத கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் பலரது கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை வென்று கொடுத்தால்தான் சிறந்த கேப்டனா? அணியை தரவரிசையின் முதலிடத்தில் எத்தனை காலம் வைத்திருக்கிறார், வெற்றி சதவீதம் என்ன என்பது முக்கியமில்லையா? என சோப்ரா கேள்வி எழுப்பினார்.
“ஒரு கேப்டனாக கபில் தேவின் வெற்றி சதவீதம் என்ன? கங்குலியின் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்டில் முதலிடம் பிடித்ததா? முதலிடம் பிடித்தாலும், எத்தனை காலம் அந்த இடத்தை தக்கவைத்தனர்? திராவிட் மற்றும் தோனியின் வெற்றி சதவீதம் என்ன? இதெல்லாம் கடினமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கு நமக்குப் பதில் தெரியாது. அதை தெரிந்துகொள்ளவும் நாம் விரும்ப மாட்டோம்” என்று கூறியுள்ளார்.