சாப்பாடு கூப்பனில் சோப்பு வாங்கிய ஊழியர்கள் - மெட்டா எடுத்த அதிரடி முடிவு
உணவுக்கு வழங்கிய கூப்பனை தவறாக பயன்படுத்திய ஊழியர்கள் மீது மெட்டா நடவடிக்கை எடுத்துள்ளது.
மெட்டா
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பது போன்ற பல்வேறு காரணங்களை காட்டி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான மெட்டா(meta), உணவு கூப்பன்களை தவறாக பயன்படுத்தியதாக 24 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது.
உணவு கூப்பன்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனம் மெட்டா.மெட்டாவில் பணி புரியும் ஊழியர்களுக்கு காலை உணவுக்கு 20$, மதியம் மற்றும் இரவு உணவுக்கு 25$(ரூ 2,100) என உணவு கூப்பன் வழங்கப்படுகிறது.
அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜெல்ஸ் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் இந்த கூப்பனை உணவுக்கு பயன்படுத்தாமல் டூத் பேஸ்ட், துணி துவைக்கும் சோப்பு போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர்.
பணி நீக்கம்
இதனை கண்டறிந்த மெட்டா நிறுவனம் ஊழியர்களை எச்சரித்தும், அவர்கள் தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்த செயலில் ஈடுபட்ட 24 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்த ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை சம்பளமாக பெறுபவர்கள். மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும், கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.